Monday, April 7, 2008

சித்தர்கள் என்பவர் யார்?

சித்தர்கள் என்பவர் யார்?

சித்தம் என்பது புத்தி மனம்.
சித்து - புத்தியால் ஆகிற காரியம்.
சித்தர் - புத்தியைக் கட்டுப்படுத்தியவர்.
சித்தர்கள் யோகத்தின் மூலமும் தியானத்தின் மூலமும் புத்தியைக் கட்டப்படுத்துவார்கள். சித்தர்களை ஆன்மீகப் புரட்சியாளர்கள் என்று சொல்வதும் உண்டு.

"சித்தர்" என்பவர் பரத்தோடு சேர்ந்தவர்கள் பிரம்மமாய் எங்கும் நிறைந்தவர்கள். அணிமா சித்திகளை (அஷ்டமா சித்திகள்) எட்டையும் அடைந்தவனே சித்தன் ஆவான். சித்தர்கள் தங்கள் ஆன்ம ஞானத்தைப் பெருக்கிக் கொண்டு தங்கள் உடலுடன் இருக்கும் பொழுதே இறைவனுடன் கலந்து விடுவார்கள். நினைவு செயல் என்பவற்றைத் துறந்து சிவனோடு ஒன்றாக கலந்து விடுவார்கள்.

கடவுளைக் காண முயல்பவர்கள் பக்தர்கள். கடவுளைக் கண்டு தெளிந்தவர்கள் சித்தர்கள். காலத்திற்கு உட்பட்டவர்கள் பக்தர்கள். காலத்தை வென்றவர்கள் சித்தர்கள்.
உடலையும் உயிரையும் பக்தர்கள் பாரமாகக் கருதுபவர்கள். ஆனால் சித்தர்கள் அவைகளை நலம் செய்யும் கருவிகளாகக் கண்டவர்கள் சித்தர்கள். 'உடம்பார் அழியின் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞானம் தேரவும் மாட்டார்" என்ற திருமூலர் பாடல் சித்தர்களின் அணுகுமுறையை தெளிவு படுத்தும்.

சித்தர்கள் இமயம், நியமம், ஆதனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரனை, தியானம் சமாதி, ஆகிய அட்ட யோக யோக வழிகளில் சிறிதும் வழுவாது வாழ்ந்து, உணவையும் உடல் இயக்கத்தையம் குறைத்து, வாசி என்ற மூச்சினை அடக்கி, நாடிகளை துய்மையாக்கி, அவைகளின் மூலம் சரீரத்தில் உள்ள ஓவ்வோர் உயிர் அணுவையும் துய்மையாக்கி, பிறகு மனன வழிபாட்டால் அணுவியக்கம் முற்றி ஒளிவடிவம் என்னும் தெய்வ வடிவம் வளர்ந்து வரும் பொழுது பொருள்களின் பொய்த் தோற்றமும் உண்மை இயல்பும் மாறி மாறித் தோன்றி முடிவில் தோற்ற மாயை மறைந்து உண்மை இயல்புமட்டும் நிலைத்துத் தோன்ற உடலை ஞான ஒளிமயமாக்கி நாத தத்துவத்தோடு இணைத்து சாவை வென்று சதாசிவமாக வாழ்வதே சித்தர்களின் வாழ்வு முறையாகும்